முக்கிய செய்திகள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

raj7 4

சென்னை, மே.- 2 - சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை நகரில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் கொள்ளை நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆணையின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் குற்றம் மற்றும் தலைமையிடம் சஞ்சய் அரோரா உத்தரவின்படி, வடபழனி குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஆர்.நந்தகுமார் தலைமையில், வடபழனி குற்றப்பிரிவு ஆய்வாளர் நடேசன், வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்வன், விருகம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரன் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த ராஜா (28) ராயப்பேட்டையை சேர்ந்த மணி (எ) வினோத் (எ) பிச்சுமணி (23) மற்றும் அவனது கூட்டாளி வெங்கடேசன் (27) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 14 சங்கிலி பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.
இவர்கள் மொத்தம் 14 வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் நடுவர் நீதிமன்றம் பூந்தமல்லியில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் கூட்டாளிகளான கணேசராஜா (24), வேல் (24), ராஜேஷ் (24) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப திறமையாக செயல்பட்ட தனிப்படையினரை சென்னை காவல் ஆணையாளர் பாராட்டினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: