முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சார்பில் பிரவீன் உடலுக்கு அஞ்சலி

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.30 - முதல்வர் ஜெயலலிதா சார்பில் உத்தரகாண்டில் வீரமரணம் அடைந்த பைலட் பிரவீன் உடலுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அஞ்சலி செலுத்து ரூ.10 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார். உத்தரகாண்ட மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கொண்ட யாத்திரீகர்களை ஹெலிக்காப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈ்டுபடும்பொழுது மதுரையைச் சேர்ந்த இந்திய விமானப்படை ஹெலிக்காப்டர் விமானி பிரவீன் என்பவர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் இருந்து தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்த பெட்டியில் விமானி பிரவீன் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை விமானத்தில் இருந்து விமான படை வீரர்கள் இறக்கி கொண்டு வந்து ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றினர். அங்கு ராணுவ அதிகாரிகள்,மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன், ஆர்டிஓ ஆறுமுகம்,தாசில்தார்கள் கங்காதரன், வீரராகவன், விமானி பிரவீன்  தாயார் மஞ்சுளா  ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிரவீனின் உடல் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  அங்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா,  மாநகர காவல் துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர்  ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்  இரங்கல் செய்தியையும், தமிழக  அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.பின்னர் வீரமரணமடைந்த  பிரவீன்  உடல் டிவிஎஸ் நகரில் இருந்து ராணுவ வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டு கீரைத்துறை மூலக்கரை மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

        இதில் மேயர் .வி.வி. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் நந்தகோபால், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், அண்ணாத்துரை, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்