அருணாசலப் பிரதேச மாநில புதிய முதல்வர் காம்லின்

JarbomGamlin 0

இதாநகர்,மே.7 - அருணாசலப்பிரதேச மாநில முதல்வராக ஜர்போம் காம்லின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஜெனரல் ஜே.ஜே.சிங் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். மறைந்த டோர்ஜி காண்டூவின் மூத்த மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளது. 

அருணாசலப்பிரதேச மாநில முதல்வராக டோர்ஜி காண்டூ இருந்தார். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டார். அவருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். டோர்ஜி அமைச்சரைவில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஜர்போம் காம்லின் முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. அவர் தேர்வு செய்யப்பட்ட உடனே காம்லினுக்கு இதாநகரில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஜெனரல் ஜே.ஜே.சிங் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். 50 வயதாகும் காம்லினுக்கு பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2004-2005-ம் ஆண்டில் முதல்வராக ஜிகாங் அபாங் இருந்தபோது காம்லிங் மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். சட்டப்படிப்பு படித்த காம்லிங், கடந்த 1999-2004-ம் ஆண்டில் லோக்சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வராக பதவி ஏற்றபின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காம்லிங், அருணாசலப்பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதே முதல் நோக்கமாக கொண்டு செயல்பட்ட டோர்ஜியின் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை கொடுப்பேன் என்றார். 

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த டோர்ஜி காண்டூவின் மூத்த மகன் பெமா காண்டூவுக்கு மாநிலத்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இருந்து லோக்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகம் சஞ்சய் தெரிவித்தார். பெமா காண்டூ தற்போது தவாங் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ