2ஜி ஊழல் பல்வாவுடன் தொடர்பு வைத்தது ஏன்?சரத்பவாருக்கு தாக்கரே கேள்வி

bal-thakre

மும்பை,மே.- 8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இல்லாவிட்டால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பல்வா மற்றும் வினோத் கோயாங்கோவுடன் தொடர்பு வைத்திருந்தது ஏன் என்று சரத்பவாருக்கு தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சரத்பவாருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சரத்பவார் மறுத்து உள்ளார். என் மீது இந்த மாதிரி ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதால் என்னை ஒன்றும் பாதிக்காது என்று சரத்பவார் கூறியுள்ளார்.
இந்தநிலையில் சிவசேனா கட்சி பத்திரிகையான சாமன்னாவின் ஆசிரியர் பகுதியில் சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரே ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்னுடைய பழைய நண்பர். அதேசமயத்தில் அரசியலில் அவர் எனக்கு எதிரியாவார். நாங்கள் எப்போதும் சரத்பவாருக்கு ஆதரவாக இருப்பவர்கள். பவார், தன்னுடைய உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் பண அரசியலில் ஈடுபட்டு தனக்கு இருக்கும் குறைந்த செல்வாக்கையும் இழந்துவிடக்கூடாது. எங்களுடைய ஆலோசனையை கேட்டியிருந்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள டி.பி. பிரமோட்டர் பல்வா மற்றும் வினோத் கோயாங்காவுடன் தொடர்பு வைத்திருக்க மாட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்னை இணைத்து கூறுவது எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சரத்பவார் கூறி மக்களை முட்டாளாக்கப்பார்க்கிறார். மற்ற தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்காமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய பல்வா,வினோத் கோயாங்கோ ஆகியோர்களுடன் நாம் ஏன் தொடர்பு வைத்துக்கொண்டோம் என்பதை சரத்பவார் ஆத்ம பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் பால் தாக்கரே எழுதியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ