முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி மன்னன் போலீசாரிடம் சிக்கியதும்-தப்பியதும்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,மே.10 - மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பண மோசடி செய்யும் போது எவ்வாறு தெளிவாக செயல்பட்டாரோ, அதே போன்று போலீசாரிடம் சிக்கிய பின்பு அவர்களிடம் இருந்து தப்பிப்பதிலும் செயல்பட்டுள்ளார். மதுரை அருகே திருநகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய விவேகானந்தன் தனது பகட்டான வாழ்க்கையால் பலரை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாகவும், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறியும், குறைந்த விலையில் வெளிநாட்டு தங்கங்களை கொடுப்பதாகவும் கூறி ஏராளமானோரிடம் இருந்து பல கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு குடும்பத்துடன் தலைமறைவானார். இவரது மோசடிக்கு மனைவி பிருந்தா, மைத்துனர் கெவின் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கோவாவில் விவேகானந்தனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் போது அவர்களிடம் இருந்து விவேகானந்தன் தப்பி விட்டார். அதனைத் தொடர்ந்து மதுரையில் பதுங்கியிருந்த அவரது மனைவி பிருந்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்நிலையில் விவேகானந்தன் போலீசாரிடம் அகப்பட்டதும், அவர்களிடம் இருந்து தப்பியதும் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. திருநகரில் இருந்து தலைமறைவான விவேகானந்தன் குடும்பத்தினர் வீட்டு உபயோக பொருட்களை பெங்களூரில் ரூ. 50 ஆயிரத்திற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பூட்டி வைத்து விட்டு கோவாவில் மாதம் ரூ. 22 ஆயிரத்திற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறியுள்ளனர். விவேகானந்தனிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் திருநகர் போலீசில் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து விவேகானந்தன் குடும்பத்தினரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரும், பல்வேறு பகுதிகளிலும் கேரளா, கர்நாடகாவிலும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். 

இந்நிலையில் விவேகானந்தன் பயன்படுத்திய செல்போன்களை தொடர்பு கொண்ட போது அவை அனைத்தும் உபயோகத்தில் இல்லை. அதனை தொடர்ந்து போலீசார் ஐ.எம்.ஏ. எண்களை சேகரித்தனர். அதிலும் அவர்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி டோல்கேட்டை தாண்டி விவேகானந்தனின் கார் சென்றதாக தகவல்கள் தெரிவித்தன. கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்ற போலீசார் அங்கு விவேகானந்தன் குறித்து விசாரித்தனர். இதற்கிடையில் பெங்களூர் வீட்டில் பூட்டி வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்களை விற்பதற்காக அங்குள்ள புரோக்கரிடம் விவேகானந்தன் தொடர்பு கொண்டுள்ளார். அப்பகுதியில் விவேகானந்தனை விசாரித்து கொண்டிருந்த தனிப்படையினருக்கும், புரோக்கருக்கும் தொடர்பு ஏற்படவே விவேகானந்தன் கோவாவில் இருப்பதை உறுதி செய்தனர். 

விவேகானந்தனை பிடிக்க அவனை போன்றே போலீசாரும் நாடகமாட தொடங்கினர். வீட்டு பொருட்களை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்து தருமாறு புரோக்கரிடம் விவேகானந்தன் கூறியுள்ளார். இதையறிந்த போலீசார் புரோக்கர் மூலம் பொருட்களை பெற்று கொள்ள ஆள் இருப்பதாகவும், பொருட்களை எப்போது பார்க்கலாம் என்வும் விவேகானந்தனுக்கு தெரிவித்தனர். முதல் நாள் தர்மசாலா என்ற இடத்திற்கு பணத்துடன் வருமாறு விவேகானந்தன் புரோக்கரிடம் தெரிவித்துள்ளார். விவேகானந்தன் குறிப்பிட்ட இடத்திற்கு புரோக்கர் சென்றார். அவருடன் போலீசார் வந்திருக்கலாம் என்று சந்தேகித்த விவேகானந்தன் சற்று தள்ளியிருந்து புரோக்கரின் நடவடிக்கைகளை கவனித்து விட்டு அன்று சந்திப்பதை தவிர்த்து விட்டார். 

அன்று இரவு மீண்டும் புரோக்கருடன் தொடர்பு கொண்டு நாளை மங்களூருக்கு பணத்துடன் வருமாறு விவேகானந்தன் தெரிவித்தார். அதன்படி மங்களூர் சென்ற புரோக்கரை அன்றும் விவேகானந்தன் சந்திக்கவில்லை. இரண்டு நாட்களிலும் புரோக்கருடன் போலீசார் வரவில்லை என்பதை உறுதி செய்த விவேகானந்தன், மறுநாள் உடுப்பிக்கு பணத்துடன் வருமாறு புரோக்கரிடம் தெரிவித்தார். அவரும் மறுநாள் காரில் உடுப்பிக்கு சென்றார். அப்போது புரோக்கரை சந்திக்க நெருங்கிய விவேகானந்தனை புரோக்கர் காரின் பின்சீட்டில் மறைந்திருந்த 2 போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட விவேகானந்தன் கோவாவில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டில் இருந்த ஒன்றே கால் கிலோ தங்க கட்டிகள், ஒன்றே கால் கோடி ரூபாய், விலையுயர்ந்த கைக் கெடிகாரம், விலையுயர்ந்த ஒரு சொகுசு பைக், மூன்று சொகுசு கார்கள் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். 

அதனை தொடர்ந்து கோவாவில் உள்ள பானாஜி கோர்ட்டில் விவேகானந்தனை ஆஜர்படுத்திய தனிப்படை போலீசார் தமிழகத்தில் விசாரணைக்காக அவரது பஜ்ரோ காரில் அழைத்து வந்தனர். ஓரிடத்தில் காரை நிறுத்திய தனிப்படை போலீசார் கடையில் டீ குடித்தனர். இரண்டு போலீசார் விவேகானந்தன் தப்பி விடாமல் இருக்க காரின் அருகே நின்றனர். காரை ஓட்டி வந்த கோவா போலீஸ்காரர், என்ஜினை ஆப் செய்து விட்டு சாவியை கையில் வைத்து கொண்டி டிரைவர் சீட்டிலேயே அமர்ந்திருந்தார். அப்போது குழந்தைகளுக்கு காற்று கிடைக்கவில்லை. அவர்கள் ஏ.சியிலேயே இருந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்காகவாவது ஏ.சியை ஆன் செய்யுமாறு டிரைவர் சீட்டில் இருந்த போலீஸ்காரரிடம் விவேகானந்தன் கெஞ்சி கேட்டார். குழந்தைகளுக்காக பரிதாபப்பட்ட போலீஸ்காரர், சாவியை போட்டு ஏ.சி.யை ஆன் செய்தார். 

இந்நிலையில் திடீரென பின்சீட்டில் இருந்த விவேகானந்தன் முன் சீட்டிற்கு தாவி குதித்தார். டிரைவர் சீட்டில் இருந்த போலீஸ்காரரை வெளியில் தள்ளி விட்டு விட்டு காரை ஸ்டார்ட் செய்து மின்னல் வேகத்தில் பறந்து மறைந்தார். இதைக் கண்ட தனிப்படை போலீசார் விவேகானந்தனை பின்தொடர்ந்தனர். சுமார் 4 கி.மீ. தூரத்தில் ரோட்டின் ஓரத்தில் விவேகானந்தனின் கார் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் சென்று பார்த்த போது உள்ளே யாரும் இல்லை. குழந்தைகளுடன் விவேகானந்தன் எஸ்கேப் ஆகி விட்டார். மோசடி செய்த போது தான் பெற்ற பணத்திற்காக யாரிடமும் எழுதிக் கொடுக்கவோ, செக்குகள் கொடுக்கவோ, உறுதி பத்திரம் எழுதிக் கொடுக்கவோ இல்லாமல் தான் மாட்டிக் கொள்ளாதவாறு தெளிவாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே போன்றே போலீசாரிடம் மாட்டிக் கொண்ட பின்னரும் மிக தெளிவாக தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்