முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியாஸ் விலை ரூ. 50 உயர்கிறது

புதன்கிழமை, 18 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.19 - கியாஸ் விலை உயர்வு குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று நடைபெறும் மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தலுக்கு காத்திருந்த மத்திய அரசு தேர்தல் முடிந்ததும் உடனடியாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தியது. இதனால் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்ந்து விட்டன. பெட்ரோலை தொடர்ந்து டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் பதட்டம் யூரோவுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பில் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து கேஸ் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரிகள் குழு கூடி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 

இதனால் பெட்ரோல் விலையை மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. டீசல்,கேஸ் விலையை மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மீண்டும் கூடி ஆலோசித்து முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதில் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 முதல் ரூ. 60 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. தற்போது நாடு முழுவதும் 12.3 கோடி சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன. மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்கவும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதியும் 2016 ம் ஆண்டுக்குள் சமையல் கேஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 16 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

தமிழகம் - புதுவையில் இண்டேன் நிறுவனம் 670 முகவர்கள் மூலம் 1.25 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு வழங்கி உள்ளது. இது தவிர பாரத் கேஸ் மூலமும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 352 ஆக உள்ளது. ரூ. 50 கேஸ் விலையை சிலிண்டருக்கு உயர்த்தினால் ரூ. 400 தாண்டும் நிலை ஏற்படும். 

சமையல் கேஸ் விலையை உயர்த்தினாலும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை சரிக்கட்ட முடியாது என்பதால் இனி வீட்டு உபயோகத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுதோறும் மானிய விலையில் 4 அல்லது 6 சிலிண்டர்களை மட்டுமே விநியோகிக்கவும், தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு தாராளமாக கேஸ் சிலிண்டர்களை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று நடைபெறும் மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் கேஸ் விலையை உயர்த்தினால் அது பொது மக்களை மிகவும் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony