முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 17 - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று சென்னையில் கூடி ஆய்வு செய்தனர. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள்  நேற்று    திங்கட்கிழமை சென்னையில் கூடி ஆய்வு செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 2_வது மாடியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய இயக்குனர் எஸ்.வி.சிங் முன்னிலை வகித்தார்.

தமிழகம் சார்பில் மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டார். ஆந்திரா தேர்தல் அதிகாரி பன்வர்லால், கர்நாடகா தேர்தல் அதிகாரி அனில்குமார்ஷா, கேரளா தேர்தல் அதிகாரி நளினி நீட்டோ, புதுச்சேரி துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

5 மாநில தேர்தல் அதிகாரிகளும் 11 மணிக்கு தேர்தல் தொடர்பான ஆய்வைத் தொடங்கினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

5 மாநிலங்களிலும் எத்தனை கட்டமாக ஓட்டுப் பதிவை நடத்த வசதி, வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மற்ற 3 பெரிய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது பற்றி பேசப்பட்டது.

2 கட்டங்களாக தென் மாநிலங்களில் ஓட்டுப்பதிவை நடத்தும்போது பாதுகாப்புப் படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசத்தை பொறுத்து 2 கட்ட ஓட்டுப் பதிவுக்கும் உள்ள கால இடைவெளியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.

மொத்தம் எத்தனை வாக்கு சாவடிகள் உள்ளன? அதில் எத்தனை ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பது பற்றியும் பேசப்பட்டது. அந்த ஓட்டுச் சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது பற்றியும் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பேசினார்கள். கள்ள ஓட்டு போடுவதை 100 சதவீதம் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூட்டத்தில் திட்ட மிடப்பட்டது.

இது தவிர மின்னணு எந்திரங்களை தயார்படுத்துவது, ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுப்பது, ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்வது, மற்றும் தேர்தல் பிரசாரத்தையும், பிரசார செலவையும் கண்காணிப்பது ஆகியவைகள் பற்றியும் பேசப்பட்டது.

ஓட்டுப்பதிவின்போது இடையூறுகளை தவிர்க்க பறக்கும் படையை பயன் படுத்துவது பற்றி அதிகாரிகள் கருத்துக்கள் வெளியிட்டனர். ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான இடம், அதிகாரிகள் பற்றியும் பேசப்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் தென் மாநிலங்களில் வரும் உள்ளூர் பண்டிகை பற்றி கேட்கப்பட்டது. உள்ளூர் பண்டிகை நாட்களில் ஓட்டுப்பதிவை தவிர்க்கும் வகையில் கருத்துக்கள் திரட்டப்பட்டது.

5 மாநில தேர்தல் அதிகாரிகளின் இந்த கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ப தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony