முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகாமில் புதுச்சேரி - நாகூர் தர்கா யானைகளும் பங்கேற்கும்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.18 - தமிழக கோயில் மற்றும் வனத்துறையின் 98 யானைகள் பங்கேற்கும் சிறப்பு புத்துணர்வு முகாமை புதுச்சேரி மாநில இந்து அறநிலையத்துறை மற்றும் வக்புவாரியத்தின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியும் நாகூர் தர்கா யானை பாத்தீமா பீவியும் கலந்து கொள்ளும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

இயற்கையின் படைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் அன்பு காட்டி பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதும்  மனிதர்களுக்கு பல்வகையிலும் உதவிடும் விலங்குகளிடத்தில் அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்பதும் அவற்றுக்கு கொடுமைகள் இழைக்கப்படாமல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம் ஆகும். 

யானைகளை முறையாக பராமரிக்காது சீரற்ற கடினமான தரையில் நிற்க வைப்பதாகவும், போதுமான ஓய்வு அளிப்பதில்லை எனவும் அவைகள் கடுமையாக நடத்தப்படுவதாகவும், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா ஜெயலலிதாவின்  கவனத்திற்கு 2003_ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் யானைகள் பல இடங்களில் அமைதி இழந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா திருக்கோயில்களில் உள்ள யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல், போதுமான ஓய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல் நலத்தைப் பேணவும், தேவையான ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியதோடு, இந்து சமய அறநிலையத் துறை தமிழக வனத்துறையின் ஒத்துழைப்போடு தமிழகத்திலுள்ள திருக்கோயில்களின் யானைகள் மற்றும் தனியார் யானைகளை நீர்வசதி கொண்ட, ஏற்ற சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை (தெப்பக்காடு) வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திடவும் ஆணையிட்டார்.

இந்நலவாழ்வு முகாம் 2006_ஆம் ஆண்டு முதல் 2011_ஆம் ஆண்டு வரை நடத்தப்படவில்லை. இதனால் யானைகளின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து, யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், 2011_2012 மற்றும்  2012_2013_ஆம் ஆண்டுகளில் "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்'' முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி நடைபெற்றது.  

இவ்வாண்டு, திருக்கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படுவதைப் போலவே, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும் இந்த நலவாழ்வு முகாம் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாஆணையிட்டுள்ளார்.  

இந்த ஆண்டு டிசம்பர் 19_ஆம் நாள் முதல் 2014, பிப்ரவரி 4_ஆம் நாள் வரை 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்'' நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையிட்டுள்ளார். இதில் திருக்கோயில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 43 யானைகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 55 யானைகள்  என மொத்தம் 98 யானைகள் பங்கேற்கவும்  இதற்கென 1 கோடியே 53 லட்சம் ரூபாயை ஒதுக்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

புதுச்சேரி மாநில இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 'லட்சுமி'   என்ற யானையை இந்த முகாமில் பங்கேற்க அனுமதிக்கும்படி புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர், நாகூர் தர்காவிற்கு சொந்தமான 'பாத்திமா பீவி' என்ற யானையையும் இந்த முகாமில் பங்கேற்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.  இந்த கோரிக்கைகளை ஏற்று, இந்த இரு யானைகளையும், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில்  அனுமதிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   எனவே,  இந்த ஆண்டு டிசம்பர் 19_ஆம் நாள் முதல் நடக்கவிருக்கும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் 100 யானைகள் பங்கேற்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்