முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் கிண்டி ரெயில் நிலையம் அருகே இரும்பு பாலம்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.24 - கோயம்பேடு_ பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் அடுத்த ஆண்டு மத்தியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் முழுவீச்சில் இரவு_ பகலாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரெயில் திட்டம் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக ஆலந்தூரில் 2 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. உயர்மட்ட பாதையாகவும், சுரங்கப் பாதையாகவும் செல்கின்ற 2 பாதைகளும் இந்த ரெயில் நிலையத்தில் இணைகின்றன.

அதனால் ரூ.20 கோடி செலவில் மிகப்பிரமாண்டமாக ஆலந்தூர் ரெயில் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை_ விமான நிலையம் மெட்ரோ ரெயில் பாதை, நிலையம் 11 மீட்டர் உயரத்தில் முதல் தளத்திலும், சென்ட்ரல்_ கோயம்பேடு_ பரங்கிமலை வழியாக செல்லும் பாதைக்கான நிலையம் 23 மீட்டர் உயரத்தில் 2_வது தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவு கையாள வேண்டிய நிலை இருப்பதால் வசதிகள் செய்யப்படுகின்றன.

கிண்டி ரெயில் நிலையம் அருகில் பாலத்தையொட்டி மெட்ரோ ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மின்சார ரெயில்கள் செல்லும் மின்பாதையை மெட்ரோ ரெயில் கடப்பதற்காக மிக உயரமாக இரும்பு பாலம் ஒன்று கட்டப்படுகிறது.

இந்த இரும்பு பாலத்தில் அமைக்கப்படும் இருப்பு பாதையில் மெட்ரோ ரெயில்கள், ரெயில் நிலையத்திற்கு செல்ல வசதியாக இது அமைக்கப்படுகிறது.

இந்த இரும்பு பாலம் பணிகள் காஞ்சீபுரம் அருகே நடைபெறுகிறது. 3 பிரிவுகளாக இரும்பு தூண்களால் நவீன தொழில் நுட்பத்தில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதனை அப்படியே கனரக வாகனம் மூலம் கிண்டி மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் பாலம் அமைகின்ற இடத்திற்கு கொண்டு வந்து பொறுத்தப்படும். மெட்ரோ ரெயில் பாதைக்காக முழுவதும் இரும்பினால் உருவாக்கப்படும் பாலம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. செவ்வக வடிவத்தில் இரும்பு பாலம் உருவாக்கப்படுகிறது. விரைவில் இந்த பாலம் கிண்டி ரெயில் நிலையம் அருகில் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்