முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு இசைப்பிரியாவுக்கு துடிக்காதது ஏன்? கருணாநிதி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.25 - அமெரிக்க இணைத்தூதர் தேவயானிக்காக அலறி துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியாவுக்காக ஏன் துடிக்கவில்லை. இலங்கையில் படுகொலையான தமிழர்களுக்கு மத்திய அரசு ஏன் துடிக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி_பதில் அறிக்கை வருமாறு:_

கேள்வி :_ அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் "தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே?

பதில் :_ அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவிற்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

கேள்வி :_ "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது என்று <.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

பதில் :_ அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?

கேள்வி :_ மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார்களே?

கலைஞர் :_ அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, மற்றும் வழக்கறிஞர்  வாகனாவதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராசா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்தே, அந்தக் கூட்டம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், (அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக) நடைபெற்றதற்கான ஆதார ஆவணங்களை, இராசா முறைப்படிக் கேட்டுப் பெற்று; தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதோடு, சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறிஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மை தான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்த போது, அதனை அவர் மறந்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் இராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் தெரிவித்தது உண்மைக்கு மாறான தகவல் என்றும், அந்தத் தகவலைத்தான் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது என்றும் தெளிவாகியுள்ளது. இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony