முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகண்'ட் பலியான தமிழக யாத்திரிகர்கள் குடும்பத்துக்கு நிதி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை: உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிப் பலியான தமிழக யாத்திரிகர்கள் குடும்பத்துக்கு தலா 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பது குறித்து அறிந்தவுடன் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 

அதன்படி, டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதி தலைமையில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை செயலாளர், மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் புதுடெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர், ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு உத்தரகண்ட் மாநில தலைநகரான டேராடூனுக்கு சென்று உத்தரகண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகத்தைச் சார்ந்த யாத்திரிகர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை எடுத்தது. உத்தரகண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரையாகச் சென்று பேரிடரில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 657 யாத்திரிகர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக தமிழக அரசின் செலவில் விமானம் மூலம் சென்னைக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டு பின்னர், அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய 14 யாத்திரிகர்களின் தடயங்களை அறிய இயலவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதா வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்திற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியதோடு, இந்த பேரழிவில் காணாமல் போன தமிழகத்தைச் சேர்ந்த 14 யாத்திரிகர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 49 லட்சம் ரூபாய் தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட ஆணையிட்டார். மேற்கண்ட யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய், உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை உத்தரகண்ட் மாநிலம் நிவாரணமாக வழங்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து புனித யாத்திரை சென்று உயிரிழந்த 14 யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன், உத்தரகண்ட் மாநிலம் நிவாரணத் தொகையும் சேர்த்து 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 98 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி ஆறுதல் கூறினார். முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட யாத்திரிகர்களின் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை முதல்வருக்குத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் ரமணா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்" என இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்