முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி மருந்து

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,ஜூன்.18 - அசாம் மாநிலத்தில் நேற்று நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கவுகாத்தி ரயில் நிலையத்தில் நேற்று காலையில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சக்திவாய்ந்த 4 கிலோ வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை வெடி மருந்து நிபுணர்களால் செயலிழக்க வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு நிகழவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இது குறித்து அரசு ரயில்வே போலீஸ் அதிகாரி திருபஜோதி கூறுகையில், ஷீல்டா என்ற இடத்தில் இருந்து கவுகாத்திக்கு வந்த கஞ்சன்ஜங்கா ரயிலில் எஸ். 5 என்ற பெட்டியில் இருந்து ஒரு மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

நல்லவேளையாக இது பற்றி தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனால் தாங்கள் துரிதமாக செயல்பட முடிந்ததாகவும் அவர் மேலும் கூறினார். இப்படி ஒரு தகவல் கிடைத்திருக்காவிட்டால் விஷமிகளால் அந்த ரயில் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும். குண்டு வெடித்து மக்கள் பலியாகி இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பெரும் விபத்தில் இருந்து தப்பிய அந்த ரயில் காலை 5.15 மணிக்கு கவுகாத்தி ரயில் நிலையம் வந்ததாகவும், அப்போது சோதனையிட்ட போது வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 

அந்த ரயிலில் இருந்து சக்திவாய்ந்த 4 கிலோ வெடி மருந்துகள், 3 டெட்டனேட்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வகையில் அந்த குண்டுகள் செட்டப் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறிய அவர், நல்ல வேளையாக அவற்றை மீட்டு செயலிழக்க செய்ததாகவும் தெரிவித்தார். முன்னதாக, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். அசாமில் இந்த நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததுமே போலீசார் அங்கு விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் கீழே இறக்க செய்தனர். அதன் பின்னரே நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இந்த ரயிலில் சுமார் 2 ஆயிரம் பேர் பயணம் செய்தார்களாம். அவர்களின் உயிரை காப்பாற்றிய அசாம் போலீசாருக்கு நன்றி சொல்வது நாட்டு மக்களின் கடமை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்