முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி. ஊழல் வழக்கில் தயாநிதிமாறனும் ஒரு குற்றவாளி-சி.பி.ஐ. தகவல்

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுலை - 7 - ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை இன்னொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்  தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின்கீழ் மத்திய புலனாய்வுத் துறை நிறுவனமான சி.பி.ஐ. நடத்திவருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2004 ம் ஆண்டுமுதல் 2007 ம் ஆண்டுவரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறனும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழும்பின. சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழங்குவதில் தயாநிதி மாறன் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 6 ம் தேதி சிவசங்கரனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்களக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தது உண்மைதான் என்று சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அப்போது ஆஜரான சி.பி.ஐ. அதிகாரிகள் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.  மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் என்ற நிறுவனத்தின் அதிபர் அனந்தகிருஷ்ணன் தயாநிதி மாறனின் நெருங்கிய நண்பர். அனந்தகிருஷ்ணனின் கம்பெனிக்கு ஏர்செல் கம்பெனியை விற்பதற்காக ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி வந்தார் என்பது தங்களுடைய விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இந்த காலதாமதத்தை அடுத்து ஏர்செல் அதிபர் சிவசங்கரன் தனது கம்பெனியை மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரா நிறுவனத்திற்கு விற்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. தங்களது விசாரணையில் தயாநிதி மாறனும் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடமே தான் தனது ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக தயாநிதி மாறன் ஏற்கனவே கூறியிருக்கிறார். இப்போது இவர் குற்றவாளி என சந்தேகிப்பதாக சி.பி.ஐ. கூறியுள்ளதால் இவர் எந்த நேரமும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்திவந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்