முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனுக்கு விரைவில் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. தீவிரம்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 9 - மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது அவர் தனது குடும்ப டி.வி. நிறுவனமான சன் டி.வி. குழுமம் ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சாக்கோ தலைமையிலான மத்திய கூட்டு குழுவினர், ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் ஆகியோர் தயாநிதி மாறனின் முறைகேடுகளுக்கான ஆதாரங்களை அளித்தனர். இதையடுத்து மந்திரி பதவியில் இருந்து விலகும் படி தயாநிதி மாறனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். மந்திரியாக இருக்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கும்படி தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மறுப்பு தெரிவித்ததையடுத்து தயாநிதி மாறன் பதவி விலகினார்.
இந்த நிலையில் சி.பி.ஐ அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகி வருகிறது. மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இருக்கும் சி.பி.ஐ. தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்தி முடிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்தது ஏன்? ஏர்செல் பங்குகளை மலேசிய நிறுவனத்துக்கு விற்க நிர்ப்பந்தம் செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சி.பி.ஐ. எழுப்பும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே தயாநிதி மாறன் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தகவல்கள் சேகரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்படும். இவை அனைத்தையும் அடிப்படையாக வைத்து குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்படும். இந்த குற்றப்பத்திரிக்கை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தாயநிதி மாறன் மீது சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!