முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 17 - திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது செயலாளர் சித்தார்த்த பெகூரா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் அனுமதியளித்துள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி இமாலய ஊழல் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ஸ்வான் கம்பெனி நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வா மற்றும் பலர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படுவதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியும், கலைஞர் டி.வி. நிர்வாக அதிகாரி சரத்குமாரும்  கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கு கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் உள்ளது.  2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா  சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பாக தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில்  ராசா, சித்தார்த்த பெகூரா, பால்வா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதே வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனையொட்டி அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் போதுமான ஆதாரம் இருந்ததால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் சில சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், ஆதாரங்களை பதிவு செய்வது தொடர்பாக மீண்டும் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.க்கு ஏற்பட்டது. அதனால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பாகவும், எதிர்தரப்பு சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், பிரபல பெண் தரகர் நீரா ராடியாவும், ஆ.ராசாவும் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியது, 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சில ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவைகளை மூன்றாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் ஆ.ராசாவை மீண்டும் நீதிமன்ற காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டபின்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா, சித்தார்த்த பெகூரா மற்றும்பலரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு நீதிபதி ஜெயின் அனுமதி அளித்தார். மேலும் 3 குற்றப்பத்திரிகையில் ஆவணங்கள், சான்றுகள், வாக்குமூலம், நீராராடியாவுடன் நடத்திய உரையாடல்கள் ஆகியவற்றையும் பதிவு செய்ய நீதிபதி அனுமதி அளித்தார். 

இதனையொட்டி ராசா மற்றும் பலரிடம் நீதிமன்றக் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதன்மூலம் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிய தகவல்கள் வெளியாகலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்