முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் - காமன்வெல்த் ஊழல்களை விவாதிக்க பா.ஜ. முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்களை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மத்திய அரசை பாரதிய ஜனதா தொடர்ந்து வலியுறுத்த உள்ளது. அரசு மறுக்கும்பட்சத்தில் ஒத்திவைக்கும் தீர்மானம் கொண்டுவர பாரதிய ஜனதா முடிவு செய்திருக்கிறது. இதனால் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தொடர்ந்து புயல் வீசும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது பிரதமர் அலுவலகத்திற்கும் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர் சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இதனால் ரூ. 1.76 லட்சம் 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தவதில் ரூ.110 கோடிக்கு டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்ஷித் மீது குற்றச்சாட்டை மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் இந்த ஊழல் குற்றச்சாட்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த இரண்டு பிரச்சினைகளையும் இன்று மீண்டும் கூடும் பாராளுமன்ற இருசபைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை பாரதிய ஜனதா வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் கட்சியின் பார்லிமெண்டரி பிரிவின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது இந்த இரண்டு மெகா ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்புவது தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா தொடர்பாகவும் ஒரு முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். கடந்த பல நாட்களாக அரசு மீதும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த ஊழல் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் கையாள வேண்டிய யுக்திகள் குறித்து தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வாரம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் ஊழல் பிரச்சினைகள் தொடர்பாக கையாள வேண்டிய முறை குறித்து இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அலுவாலியா கூறினார். இந்த இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசு தரப்பில் விவாதிக்க மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில் இருசபைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து இந்த இரண்டு ஊழல் பிரச்சினைகளையும் விவாதத்திற்கு எடுத்தக்கொள்ள செய்யப்படும் என்றும் அலுவாலியா தெரிவித்தார். டெல்லி அரசு மீது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று நிருபர்கள் கேட்டதற்கு அலுவாலியா நேரடியாக பதில் அளிக்காமல் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பின்னர் எல்லாம் உங்களுக்கு தெரியும் என்றார். காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்ததில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் மீது குற்றஞ்சாட்டியிருப்பதையொட்டி அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்றும் அலுவாலியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்