முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.19 - நீதிபதி செளமித்ரா சென்னை பதவிநீக்கம் செய்யும் கண்டன தீர்மானத்திற்கு ராஜ்ய சபை நேற்று ஒப்புதல் அளித்து புதிய வரலாறு படைத்துள்ளது.கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு கோரிக்கை வந்தது. இதையடுத்து அவர் ஒரு சிறப்பு விசாரணைக்கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, நீதிபதி சென் மீதான நிதி முறைகேடு புகார் உண்மையானது என்று கண்டுபிடித்தது. 1984ல் வக்கீலாக இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ரூ.33லட்சம் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க ராஜ்யசபா உத்தரவிட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் ராஜ்யசபாவில் ஆஜரானார் . ராஜ்ய சபாவில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றார். அவருக்கு பின்னால் அவரது வக்கீல்கள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து பதவி நீக்க தீர்மானத்தை சி.பி.எம். உறுப்பினர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டுவந்தார். இதையடுத்து தனது தரப்பு வாதத்தை 90 நிமிடங்களுக்குள் தரலாம் என சென்னுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வக்கீல்களுக்குப் பதிலாக தானே வாதாடினார் சென். அவர் கூறுகையில்,

என் மீதான ஊழல் புகார்கள் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை. நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. சட்டப்படியும் சரி, மனசாட்சிப்படியும் சரி நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கும், ராஜ்ய சபாவுக்கும் இந்த புகார்கள் தொடர்பாக தரப்பட்டுள்ளவை தவறான தகவல்களாகும் என்று வாதிட்டார்.

இந்த தீர்மானத்தின் மீது நேற்றும் ராஜ்ய சபாவில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு இந்த கண்டன தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 189 உறுப்பினர்களும் எதிராக 17 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார். இந்த தீர்மானம் அடுத்து லோக்சபைக்கு அனுப்பி வைக்கப்படும்.  அங்கும் அது நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நீதிபதி செளமித்ரா சென்னை பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படி, ஒரு உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மீது ஊழல்புகார் வந்தால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றி அதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம்கொண்டுவரப்பட்டது. 1993 ம் ஆண்டு இது நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இதனால் இந்த தீர்மானம் தோற்று ராமசாமி தப்பினார். ராமசாமி சார்பில் அவரது வக்கீலாக கபில்சிபல் ஆஜரானார் என்பது குறிபிடத்தக்கது.  இரு அவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் செளமித்ரா சென்னுக்கு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்