முக்கிய செய்திகள்

பெரு நாட்டில் பூகம்பம் கட்டிடங்கள் குலுங்கின

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

லிமா,ஆக.26 ​ பெரு நாட்டில் பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டையொட்டி பெரு நாடு உள்ளது. இங்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் லிமா அருகில் உள்ள புகல்யா நகரை மையமாக கொண்டு இந்த பூகம்பம் தாக்கியது. அமேகான் சதுப்பு நிலப்பகுதி மற்றும் லிமா நகரம் பக்கத்தில் உள்ள பிரேசில் நாட்டு எல்லை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி இருந்தது. 800 கி.மீ சுற்று வட்டார பகுதியில் பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. இதனால் தலைநகர் லிமாவில் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் கட்டிடங்களில் இருந்த மக்கள் பீதியில் வெளியில் ஓடி வந்து சாலைகளில் குவிந்து இருந்தனர். 

பூகம்பம் காரணமாக லிமா நகரில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பொருள் வாங்க வந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். மத்திய பெரு நாட்டில் ரேடியோவில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அரசு கட்டிடங்களில் இருந்த ஊழியர்களும் அவசரமாக வெளியேறினார்கள். இதையடுத்து லிமாவில் அவசர உதவிக்கு மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனால் சேத விபரம் ஏதும் இல்லை என்று புகலிக்காவில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினார். 

ஆயில், கியாஸ் மற்றும் எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் அமெரிக்காவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது தென் அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2007 ல் பெரு நாட்டில் 7.9 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்: