முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே போதாது

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.27 - ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தன்னுடைய மவுனத்தை கலைத்து ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசியுள்ளார். தனி நபரின் உத்தரவுகளை எல்லாம் ஏற்க முடியாது என்றும் கூறியிருப்பதன் மூலம் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை அவர் நிராகரித்து விட்டதாகவே தெரிகிறது. 

ஊழலை ஒழித்துக்கட்ட வலிமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அதாவது ஜங்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங் பலமுறை கேட்டுக் கொண்டும் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. தற்போதும் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். 

எல்லா மாநிலங்களிலும் லோக்பால் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார் என்றும் கூறி பிரதமருக்கு ஹசாரே ஒரு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் ஜங்லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்திற்கு பாராளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு இந்த நோட்டீஸ் வழிவகை செய்யும். 

இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபையில் நேற்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தன்னுடைய மவுனத்தை கலைத்து பேசினார். அப்போது பேசிய அவர், ஊழலை ஒழித்துக் கட்ட லோக்பால் சட்டம் மட்டுமே உதவி செய்யாது என்று அடித்துக் கூறினார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிற பாணியில் அவரது பேச்சு அமைந்திருந்தது. மேலும் தனி நபர்களின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அது ஜனநாயக செயல்பாட்டை பலவீனப்படுத்தி விடும் என்று கூறிய அவர், ஆபத்தான முன்மாதிரிகளை ஏற்படுத்தி விடும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார். 

ஊழல் என்பது அனைத்து மட்டங்களிலும் நிறைந்துள்ளது. அது யதார்த்தமாகி விட்டது. அப்படிப்பட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே தீர்வாகாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதை ஒழித்துக் கட்ட தேர்தல் கமிஷனை போன்ற மிக அதிகாரம் கொண்ட அரசியல் சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும். வலுவான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு விரிவான செயல்திட்டங்களை வரவேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். 

ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை எல்லா மட்டத்தினரும் ஆதரிக்கும் வகையில் ஒரு அரசியல் திட்டம் தேவை. அது மட்டுமின்றி அரசியல் மன உறுதியும் தேவை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேள்வி நேரத்திற்கு பிறகு அவர் இவ்வாறு பேசிய போது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதற்கு முடிவு காண வேண்டுமே தவிர, தனி நபரின் உத்தரவுகளை ஏற்பது ஆபத்தில் போய் முடியும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார். 

அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை பற்றி குறிப்பிட்ட அவர், இது மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள உதவியிருக்கிறது. அந்த வகையில் ஹசாரேவிற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தனி நபரின் உத்தரவுகள் ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்தி விடக் கூடாது என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இன்றைக்கு ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வர சொல்வார்கள். நாளைக்கு வேறு எதையாவது குறி வைத்து சொல்வார்கள். இது ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையையும் சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பாதித்து விடும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பார்வையாளர்கள் கேலரியில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

முன்னதாக, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் இடையூறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்