முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்திதுறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் மறுஆய்வு

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 5 - பாதுகாப்பு,உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்பட பல்வேறு முக்கிய துறைகள் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் அலுவலகம் தீவிர மறு ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளன. ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவரக்கோரி அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததால் அதை சமாளிப்பதில் பிரதமர் மன்மோகன் சிங் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அந்த பிரச்சினை ஓரளவு முடிந்துவிட்டதால் மத்திய துறைகளின் செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். பாதுகாப்பு, உள்கட்டமைப்பு,எரிசக்தி, நிலக்கரி, சுரங்கம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் செயல்பாடுகள் குறித்து மறு ஆய்வு தொடங்கியுள்ளது. கடந்த வாரம் முதலில் எரிசக்தி துறையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நாட்டின் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதன் செயல்பாட்டை அதிகரிக்க புதிய நிலக்கரி மற்றும் தாதுப்பொருட்கள் சட்ட செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு 17 ஆயிரம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நிலக்கரி,எரிசக்தி,சுரங்கம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உருக்கு மற்றும் மாற்று எரிசக்தி ஆகிய 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது எரிசக்தி துறையை ஊக்குவிப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் கடற்கரையோரங்களில் பாதுகாப்பு அதிகரித்தல், சீனாவையொட்டி உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அடுத்தபடியாக நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த மறுஆய்வை அடுத்தவாரம் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்கிறார். சமூக துறையோடு நாட்டில் சாலை,நெடுஞ்சாலை வசதிகளை பெருக்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony