முக்கிய செய்திகள்

மத்திய அரசின் சதி வேலையை முறியடித்தவர் ஜெயலலிதா- முத்துமணி எம்.பி. பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

நீலகிரி,செப்.- 27 - நீலகிரி மாவட்ட ஐந்து லாந்தர் பகுதியில் உதகை நகர செயலாளர் டி.கே. தேவராஜ் தலைமையிலும், நகர அவைத் தலைவர் குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணி மற்றும் லோகநாதன், சிவகாமி, நந்தகுமார், பாலன், ஜெனிபர் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான புத்திசந்திரன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். முத்துமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டு உன்னதம் சேர்த்தவர் அண்ணா. உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தி தமிழர்களின் பெருமையையும், கலாச்சாரத்தையும் உலகறிய செய்தவர் அவர். அண்ணாவின் மறைவின் போது கூடிய மக்கள் கூட்டம் போல் அதற்கு முன்பு இறந்த எந்த தலைவருக்கும் அஞ்சலி செலுத்த கூடவில்லை என்று குறிப்பிட்டு அந்த அஞ்சலி ஊர்வலம் 1984 ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதனால்தான் எம்.ஜி.ஆர். தனது இயக்கத்துடன் அண்ணாவின் பெயரையும் கொடியில் அண்ணாவின் உருவத்தையும் பொறித்து உருவாக்கிய அ.தி.மு.க. 1977 ல் ஆட்சி பொறுப்பை ஏற்று 1987 வரை ஏழை, எளிய மக்களுக்காக கோலோச்சியது. அந்த வழித்தடத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் காத்து ஆட்சி செய்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா. நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக தேயிலை தோட்டங்களில் தங்களது உழைப்பை நல்கி வரும் படுகர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. மேலும் தேயிலைக்கு கிலோ ஒன்று ரூ. 2 வீதம் மானியம் அறிவித்து சுமார் ரூ. 10 கோடியை வழங்கி சிறு, குறு விவசாயிகளின் நலனை காத்தார் நம் முதல்வர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தேயிலை தோட்ட விவசாயிகள் பல நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கடுமையாக தாக்கி குற்றவியல் வழக்குகளை கருணாநிதி அரசு தொடுத்தது. இது குறித்து விசாரித்த மனித உரிமை கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அறிவித்தது. ஆனால் கருணாநிதி அரசு அதை வழங்காமல் ஆட்சியை விட்டும் போய் விட்டது. 

மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, மேற்படி நஷ்ட ஈட்டு தொகையை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கினார். நீலகிரி  மாவட்டத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு மூட முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையை எடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிறுவனத்தை புணரமைக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் துறை செயலாளர்கள் குழு இந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று முடிவு செய்தது. இது தொழிலாளர் சமுதாயத்திற்கு செய்யும் நிரந்த துரோகம் இல்லையா? மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமானால் பரிந்துரைப்படி ரூ. 302 கோடியை ஒதுக்கீடு செய்து ஆசியா கண்டத்திலேயே ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலையான இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புணரமைத்து தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு நீலகிரி மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரிய முன்வர வேண்டும். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு சதி வலை பின்னி மறைமுகமாக தொழிற்சாலையை மூட திட்டம் தீட்டி வருவதை அறிந்து நமது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தொழிலாளர் சமுதாயம் ஒன்றுபட்டு போராடும். இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூட நினைக்கும் மத்திய அரசின் சதி திட்டத்தை முறியடித்தவர் முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.  

இம்தியாஸ் எம்.சி. நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: