முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா அறிவாலய நில பிரச்சினை: கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி, அக். - 15 - அண்ணா அறிவாலய நிலம் 25 கிரவுண்ட்தான் என கூறியுள்ள கருணாநிதி, மீதியுள்ள நிலத்தை அரசுக்கு கொடுக்கத் தயாரா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது,  தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள நிலமே மிரட்டி அபகரித்ததுதான் என திருச்சி தேர்தல் பிரச்சாரத்தில் நான் கூறினேன். இதற்கு பதிலளித்த கருணாநிதி, அண்ணா அறிவாலயம் அமைந்திருப்பது 25 கிரவுண்ட் நிலத்தில்தான் எனத் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொய். அண்ணா அறிவாலயத்தின் மொத்த நிலம் 4.5 ஏக்கர்(90 கிரவுண்ட்) ஆகும். ஆனால் அண்ணா அறிவாலய நிலம் 25 கிரவுண்ட்தான் என்றால் மீதமுள்ள இடத்தை அரசுக்கு கொடுக்கத் தயாரா?  அன்று ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ. 9 லட்சத்துக்கு மிரட்டி வாங்கினார் என சர்க்காரியா கமிஷனில் சுப்புரத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி ஏன் எதுவும் கூறவில்லை. இந்த இடத்தை தரவில்லை எனில் அரசு தேவைக்கு எடுத்துக் கொள்ளும். அதற்கு இழப்பீடு குறைவாகத்தான் கிடைக்கும் என மிரட்டியதாக சுப்புரத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும், அவர் எதுவும் கூறாதது ஏன்? சொத்து வரி செலுத்தக் கோரி நில உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வரி வசூல் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நோட்டீஸ் அனுப்பியதே நிலத்தை மிரட்டி அபகரிக்கத்தான்.  தி.மு.க அரசு அந்த நிலத்துக்கு ரூ. 60,123 வரி விலக்கு அளித்துள்ளது. அதன் மூலம் அரசுக்கு வரி இழப்பை கருணாநிதி ஏற்படுத்தி உள்ளார். ஏழை மக்களை மேம்படுத்தவே தி.மு.க. அறக்கட்டளை தொடங்கப்பட்டதாக கூறுகின்றனர். கட்சியின் சொத்துக்களை பாதுகாக்கத்தான் தி.மு.க. அறக்கட்டளை தொடங்கப்பட்டதாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆனால் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தர்ம காரியத்துக்காகத்தான் அறக்கட்டளை எனக் கூறியுள்ளார். இவ்வாறு மாறி மாறி அவர் பேசி வருகிறார். இதில் இருந்தே கருணாநிதியின் நிலையற்ற தன்மை தெளிவாகிறது.
செங்கல்பட்டு பென்னலூர்பேட்டை ஜமீனுக்கு சொந்தமான இந்த இடத்துக்கு ஜமீனில் உள்ள 18 பேரில் 10 பேர் கையெழுத்திட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலான கையெழுத்துக்கள் கேள்விக்குறியானவை. தி.மு.க. அறக்கட்டளையில் எம்.ஜி.ஆர் உறுப்பினராக இருந்ததாக கருணாநிதி தெரிவித்துள்ளார். உண்மை என்னவென்றால் இந்த நிலத்துக்கான பத்திரத்தில் கருணாநிதி பெயர் மட்டுமே உள்ளது. நிலத்தை மிரட்டி வாங்க எம்.ஜி.ஆர். எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதியின் அக்கிரமங்களை எதிர்த்ததால் அவரை 1972 ல் கட்சியில் இருந்து கருணாநிதி நீக்கினார்.
இதனால்தான் கடந்த 17.10.1972 ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் தொடங்கினார். இதையடுத்து 18.10.1972 ல் தி.மு.க. அறக்கட்டளையில் இருந்து எம்.ஜி.ஆர் பெயர் நீக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை சந்திக்க முடியாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது கேலிக்கூத்தாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்