முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா குழுவின் நன்கொடை பணம் எங்கே போகிறது - அக்னிவேஷ்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அக்.- 24 - அன்னா ஹசாரே குழுவுக்கு மக்கள் வழங்கும் நன்கொடைப் பணம் எங்கே போகிறது என்பது குறித்து ஸ்வாமி அக்னிவேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த நன்கொடைப் பணம் அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த கெஜ்ரிவால் என்பவரின் அறக்கட்டளைக்கு திருப்பி விடப்படுகின்றன. எனவே இந்த நன்கொடை பணம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஸ்வாமி அக்னிவேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்னிவேஷ் நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்னா ஹசாரே குழுவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தில் ரூ. 80 லட்சம் அர்விந்த் கெஜ்ரிவால் நடத்தும் அறக்கட்டளைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் அக்னிவேஷ் டெல்லியில் நேற்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக பொதுமக்கள் ஏராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்த நன்கொடை பணம் அர்விந்த் கெஜ்ரிவால் நடத்தும் அறக்கட்டளைக்கு திருப்பி விடப்படுகின்றன. ஆனால் அந்த அறக்கட்டளையில் அன்னா ஹசாரேவின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் பெயரும் இடம்பெறவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அன்னா குழுவினரின் நன்கொடைப்  பணம் அர்விந்த் கெஜ்ரிவாலின் அறக்கட்டளைக்கு ஏன் செல்கிறது இதற்கு ஒளிவு மறைவு இல்லாத விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அக்னிவேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தனது குழுவுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் பற்றிய விபரங்கள் வலைதளத்தில் ஒளிவு மறைவில்லாமல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே விரும்புகிறார். ஆனால் அந்த நன்கொடைகள் பற்றிய விபரங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. நன்கொடை விபரங்கள் குறித்த தணிக்கை அறிக்கையை அக்டோபர் 15 ம் தேதிக்குள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நடந்த குழு கூட்டத்தில் அன்னா ஹசாரே தனது குழுவினருக்கு கட்டளையிட்டிருந்தார். ஆனால் அந்த விபரங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்படாதது மர்மமாக உள்ளது என்றும் அக்னிவேஷ் குற்றம் சாட்டினார்.
ஒரு புதிய அறக்கட்டளையை தொடங்கவும் அதில் அன்னா ஹசாரே குழுவில் உள்ள முக்கிய நபர்களின் பெயர்களை சேர்க்கவும் அன்னா ஹசாரே திட்டமிட்டுள்ளதாகவும் அக்னிவேஷ் கூறியுள்ளார். பொதுமக்கள் வழங்கும் நன்கொடைப் பணத்தை அர்விந்த் கெஜ்ரிவால் தனது அறக்கட்டளைக்கு ரகசியமாக டெபாசிட் செய்து வருவதாகவும் அக்னிவேஷ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!