ஊழல்,விலைவாசி, கறுப்பு பணம்: சோனியா மவுனமாக இருப்பது ஏன்?-அத்வானி

Image Unavailable

 

மும்பை, நவ. - 7 - வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள கறுப்பு பணம், நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, நாடெங்கும் பரவியுள்ள ஊழல் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாய் திறக்காதது ஏன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கேள்வி எழுப்பி உள்ளார்.  ஊழலை எதிர்த்து ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  கம்யூனிஸ்ட் நாடுகளில் இருந்ததை போல அரசின் தலைவரை விட கட்சியின் தலைவர் அதிகாரம் மிக்கவராக, செல்வாக்கு உள்ளவராக இப்போது இருப்பது நமது நாட்டில் மட்டும்தான். இந்த நிலையில் இந்தியாவை வாட்டி வதைக்கும் இந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து கட்சியின் பத்திரிக்கை தொடர்பாளர்கள்தான் பேசுகின்றனரே தவிர காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா மவுனம் சாதிப்பது ஏன் என்று விளங்கவில்லை. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கெல்லாம் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த மக்களவை தேர்தலில் வாக்குறுதி தந்தது. இதுவரை நிறைவேற்றவில்லை.  700 இந்தியர்கள் கறுப்பு பணம் வைத்திருப்பதாகவும், அவர்களில் 3 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஆனால் அவர்கள் யார் என்ற விவரம் தர மறுக்கின்றது. உலகின் பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் கூட கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரவும், சமூக விரோதிகள் தண்டனையில் இருந்து தப்பவிடாமல் இருக்கவும், தேச நலனில் அக்கறை சொல்லிக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்கின்றன. இந்திய அரசு ஏன் இதில் தயக்கம் காட்டுகிறது. யாரை பாதுகாக்க நினைக்கிறது.  தங்களுடைய நலனில் அக்கறையுடன் செயல்படாத நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்காளர்கள் திரும்ப அழைக்க உரிமை வேண்டும் என்ற கொள்கை நல்லதாக இருந்தாலும் அதை அமல் செய்ய சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அது அரசை ஸ்திரமற்றதாக்கும் என்பதாலும் ஆதரிக்க முடியாது. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னால் பலமுறை யோசிக்க வேண்டும். நன்கு சிந்திக்காமல் செயல்பட முடியாது என்றார் அத்வானி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ