கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் வழங்க கோர்ட்டு உத்தரவு

Image Unavailable

 

கவுகாத்தி, நவ.- 8 - 1998-ம் ஆண்டு ஒரு பள்ளிக்கூட முதல்வரால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு  அளிக்க மத்திய அரசுக்கு  கவுகாத்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிபுரா மாநிலம்  காக்ராபான் என்ற இடத்தில் மத்திய அரசால் நடத்தப்படும்  ஜவஹர்  நவோத்யா வித்யாலயா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1998-ம் ஆண்டு  8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவியை அதே பள்ளியின் முதல்வர்  ஹரிசங்கர் பிரசாத் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த மாணவி கர்ப்பமுற்று அடுத்த ஆண்டே ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள். இந்த கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிவேதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் தற்போது சிறையில்  கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்த  நிலையில் கற்பழிக்கப்பட்ட பெண் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி கவுகாத்தி ஐகோர்ட்டில்  மனு செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, பள்ளி முதல்வரால் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ரூ. 10 லட்சத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை திரிபுரா பெண்கள் கமிஷனின்  வட்டாரங்கள் தெரிவித்தன.  நஷ்ட ஈடு கோரும் வழக்கில்  திரிபுரா பெண்கள் கமிஷனும் ஒரு துணை மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ