ஏர்செல் விவகாரம்: விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம்

Image Unavailable

 

புது டெல்லி, நவ.11 - ஏர்செல் நிறுவனத்தை தொழிலதிபர் சிவசங்கரன் விற்க நேரிட்ட சூழ்நிலை மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் சலுகைகள், முன்னுரிமை குறித்து தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.ஐ. தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தயாநிதி மாறன் மத்திய அரசில் தி.மு.க.வின் சார்பில் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த 2004 ம் ஆண்டு முதல் 2007 வரையிலான காலத்தில் அத்துறையின் முக்கிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற, இப்போதும் பணியில் இருக்கிற உயரதிகாரிகளிடம் விசாரணை நடைபெறப் போகிறது. இது ஏற்கனவே நடந்த விசாரணைகளின் தொடர்ச்சியாகவும் அமையப் போகிறது. 

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் இப்போது ஏர்செல் நிறுவனத்தை விற்க ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் குறித்தும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு காட்டப்பட்ட சலுகைகள் குறித்தும் முக்கியத்துவம் தந்து விசாரிக்கப்போவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் துறை விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேட்கப்படும். தொலைத் தொடர்பு துறையில் செயலாளராக இருந்த திரிபேந்திரா மிஸ்ரா, டாக்டர் ஜே.எஸ். சர்மா ஆகியோரிடம் விசாரணை நடைபெறும். சர்மா இப்போது டிராய் அமைப்பின் தலைவராக பதவி வகிக்கிறார். 

வயர்லெஸ் பிரிவில் இணை ஆலோசகராக இப்போதும் பதவி வகிக்கும் ராம்ஜி சிங் குஷ்வாஹா, முன்னாள் மூத்த துணை இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்த மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் பல சரியான காரணங்கள் ஏதும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான விசாரணை கமிஷனும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ