சீக்கிய தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவலா? உளவுத் துறை எச்சரிக்கை

Image Unavailable

மும்பை, நவ. - 22 - மும்பையில் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் முயன்று வருகிறார்கள். மும்பை போலீஸ் மற்றும் அதிரடிப் படையினர்களின் ஏற்பாடுகளால் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பைக்குள் புக முடியாமல் உள்ளனர். அவர்களால் தீவிரவாதத்துக்கு ஊக்குவிக்கப்பட்ட இந்திய முஜாஹிதீன்களுக்கும் இதே நிலைதான். இந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்களை அதிரடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனால் தாக்குதல்களை தொடர லஸ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிகள் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து நாச வேலைக்கு அவர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்சா அமைப்புடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வலுவான உறவை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த சிலரை பாகிஸ்தானுக்கு வரவழைத்து பயிற்சிகள் கொடுத்ததாக தெரிகிறது. இந்த பப்பர் கல்சா அமைப்பின் மூலம் திடீர் தாக்குதல்களுக்கு லஸ்கர் இ தொய்பா முயன்று வருகிறது. முதல் கட்டமாக தற்கொலை தாக்குதல் பயிற்சி பெற்ற பப்பர் கல்சா தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. நவி மும்பையில் உள்ள ரகசிய முகாம்களில் அவர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது.  பப்பர் கல்சா தீவிரவாதிகளுடன் விடுதலைப் புலிகளும் இருப்பதாக தெரிகிறது. விடுதலைப் புலிகள் மூலம் எளிதாக தாக்குதல் இலக்குக்கு செல்ல முடியும் என்று கருதி அவர்கள் உதவியை நாடி உள்ளனர் லஸ்கர் இ தொய்பா அமைப்பினர். இந்த தீவிரவாதிகள் மும்பையில் எந்த நேரத்திலும் கைவரிசையை காட்டக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மும்பை போலீசை மத்திய உளவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. உளவுத் துறை விடுத்த ரகசிய எச்சரிக்கை இந்த மாத தொடக்கத்தில் பெறப்பட்டது.  எனவே பப்பர் கல்சா தீவிரவாதிகளும், விடுதலைப் புலிகளும் கடந்த மாதமே ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உளவுத் துறையிடம் இருந்து வந்துள்ள எச்சரிக்கையை மும்பை போலீசார் நேற்று உறுதி செய்தனர். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் நவி மும்பை பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள முக்கிய பகுதிகளில் ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ