முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்பவார் தாக்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 26 - பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் சரத்பவார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் தொடர்ந்து 4 வது நாளாக நேற்றும் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 22 ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உ.பி. மாநிலத்தை 4 ஆக பிரிப்பது, தனித் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 3 நாட்களாக லோக்சபை, ராஜ்யசபை ஆகிய இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு லோக்சபை கூடியதும், சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டிற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததை கண்டித்து எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சரத்பவார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் இந்த முடிவை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர். கேரள எம்.பி.க்கள் டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் அதிகமாக இருந்தது. இதனால் சபையை சபாநாயகர் மீராகுமார் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். பிறகு மீண்டும் சபை 12 மணிக்கு கூடியபோது மத்திய உணவு மந்திரி சரத்பவார் தாக்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் பேசுகையில், மத்திய மந்திரி தாக்கப்பட்டது துரதிருஷ்டமானது என்றும், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்றார். இந்த தீர்மானத்தின் மீது மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பேசினார். இதையடுத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ஜனநாயகத்தில் இத்தகைய வன்முறையை ஏற்க இயலாது என்றார். சரத்பவார் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க. தனது கண்டனத்தை தெரிவிக்கிறது என்றார். இடதுசாரி கட்சி தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்த அமளி ஏற்பட்டது. ஆனாலும் இந்த முதலீட்டை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இதற்கு பா.ஜ.க., இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீண்டும் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார். நேற்று ராஜ்யசபையிலும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்த பிரச்சனையால் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி ஒரு அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்தார். சபையில் நடந்த கூச்சல் குழப்பத்தால் அவர் வாசித்தது என்னவென்று தெரியவில்லை. இதற்கிடையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் டேம் 999 படம் குறித்து நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி குறித்து கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபையை வரும் திங்கட்கிழமை வரை அவைத்தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார். இதையடுத்து கடந்த 4 நாட்களாக பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்