முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக ஊழல் புகார்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, டிச.- 7- பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக அம்மாநில சட்டமன்ற மேலவையில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி.க்கள் ஊழல் புகாரை தெரிவித்துள்ளனர். பீகார் மாநில மேலவை கூட்டம் நேற்று காலை கூடியது. அப்போது பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை  சேர்ந்த எம்.எல்.சி.க்கள் 9 பேர் கைகளில் பதாகைகள் மற்றும் பேனர்களை ஏந்தியபடி சபைக்குள் வந்தனர். அவர்கள் வரும் போதே முதல்வர் நிதீஷ் குமார், ஐக்கிய  ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்  சிவானந்த் திவாரி ஆகியோருக்கு எதிராக ஊழல் புகார் குறித்த கோஷங்களை எழுப்பிக்கொண்டு வந்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. கால்நடை தீவன முறைகேடுகளில் இவர்கள் இருவரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணத்தை சுருட்டியதாக ராஷ்டிரிய ஜனதா தளம்  எம்.எல்.சி.க்கள் குற்றம் சாட்டினார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி.க்களுக்கு எதிரா  ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை  சேர்ந்த எம்.எல்.சி.க்கள் கோஷம் போட்டனர். நிதீஷ்குமார், திவாரி ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்க சபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.சி.க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க சபை தலைவர் தாராகாந்த் ஜா மறுத்து விட்டார். இருந்தாலும் மேல் சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் கவுஸ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று ஜா கேட்டுக்கொண்டார். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி.க்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இந்த ஊழல் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  ஆனால் சபை தலைவர்  ஒருவாறாக சபையில் அமைதியை ஏற்படுத்தி வழக்கமான பணிகளை தொடர்ந்தார். மேல் சபையில் நடந்த இந்த ஊழல் புகார் குறித்த அமளி பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்