முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜீத் சிங் புதிய மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 19 - ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜீத் சிங் நேற்று புதிய மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.  உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அஜீத் சிங் தலைமையிலான  ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதை அடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அஜீத் சிங் கட்சி  இணைந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சமீபத்தில் அஜீத் சிங் சந்தித்து பேசியபிறகு  இந்த முடிவு எட்டப்பட்டது.

அஜீத் சிங் கட்சிக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் அஜீத் சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி தர  காங்கிரஸ் மேலிடம் சம்மதித்தது. அதன்படி ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சி ஒன்றில் அஜீத் சிங் புதிய மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு  ஜனாதிபதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ள அஜீத் சிங்கிற்கு விமான போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி,  மத்திய அமைச்சர்கள்  ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர். 1989-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக அஜீத் சிங் பங்கேற்றார். அதன் பிறகு  முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அஜீத் சிங் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மத்திய உணவு துறை அமைச்சராக  இருந்தார். அதன் பிறகு மூன்றாவது முறையாக இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு  சேர்ந்து மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். 72 வயதான அஜீத் சிங் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள விவசாயிகள் அஜீத் சிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் சிங் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்க முக்கிய காரண கர்த்தாதாவாக இருப்பவர்  காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்  ராகுல் காந்திதான். அவரும்கூட இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். காங்கிரஸ் கட்சியுடன் அஜீத்சிங் கட்சி கூட்டு சேர்ந்ததை அடுத்து லோக் சபையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 272 ல் இருந்து 277 ஆக அதிகரித்துள்ளது. அஜீத் சிங் புதிய அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 76 ல் இருந்து 77 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்