முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறில் கோலாகலம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

நவக்கிரகங்களில் தனிப்பெருமை பெற்றவர் சனீஸ்வரன். இவர் ஈஸ்வர பட்டம் பெற்றவர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அப்போது பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சனிப்பெயர்ச்சி நாளை 21.12.2011 அன்று காலை 7.24 மணிக்கு நடைபெறுகிறது. சனிபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். அப்போது சனீஸ்வரருக்கு பல்வேறு ஸ்தலங்களில் விசேஷ யாகம், அபிஷேக ஆராதனை, தீப ஆராதனை ஆகியவை நடைபெறும். சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு, குச்சனூர் ஆகிய ஸ்தலங்களில் மிகச் சிறப்பான முறையில் ஒருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி மாநிலம்  காரைக்காலுக்கு 5 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு உள்ளது. இங்குள்ள ஈசன், தர்பாரண்யேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இத்திருத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதி உண்டு. தென்னிந்தியாவிலேயே சனிப்பெயர்ச்சி இங்குதான் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சனிப்பெயர்ச்சி நாளன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடி இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் மூழ்கி பின்னர் சனீஸ்வரனை வணங்குவார்கள். சனீஸ்வரனால் பாதிக்கும்படியான ராசிகளை உடையவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்துகொண்டால் இவரது பார்வையின் தீட்சண்யம் குறைந்து நன்மை பெறுவார்கள் என்பது ஐதீகம். சனீஸ்வர பகவான் நீதிபதிக்கு சமமானவர். முற்பிறவியிலேயோ அல்லது இந்தப் பிறவியிலேயோ தவறு செய்தவர்களுக்கு அவர்கள் திருந்தும் வகையில் தண்டனை தரக்கூடியவர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அனுபவம் கூடுகிறது. இந்த அனுபவத்தின் பலனாக தங்கத்தை நெருப்பில்  புடம் போட்டது போல அவர்கள் வாழ்வு பொலிவு பெறும். ஆகவே சனியின் பார்வை அவர்களுக்கு நன்மையையே விளைவிக்கும். 

திருநள்ளாறின் சிறப்பு

நளச்சக்கரவர்த்தி தமயந்தியை திருமணம் செய்ய விரும்பினார். தமயந்தியின் தந்தையான சேதி நாட்டு மன்னர் ஒரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். தமயந்தியை மணக்க சனீஸ்வரன், இந்திரன், அக்னி, எமன், வருணன் ஆகிய தேவர்களும் விரும்பினர். இவர்கள் அனைவரும் சுயம்வரத்தில் நளனுடன் கலந்துகொண்டனர். நளனை தமயந்தி மனதால் வரித்துக்கொண்டதால் நளனை மணாளனாக தேர்ந்தெடுக்க விரும்பினார். அனால் வந்திருந்த தேவர்களும் நளன் உருவிலேயே வந்திருந்தனர். தமயந்தி குருவின் யோசனைப்படி தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து மனித உருவில் இருந்த நளனை சாதுர்யமாக மணாளனாக தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட சனீஸ்வரர்,  தேவர்களாகிய நம்மைவிட்டு மனிதனாகிய நளனை தேர்ந்தெடுத்துக்கொண்டாளே என்று தமயந்திக்கு துன்பம் தர நினைத்தார். ஆனால் தமயந்தியின் நேரம் 12 ஆண்டுகாலத்திற்கு மிக உன்னதமாக இருந்ததால் அவளை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் புகுந்த வீடான  நிடதநாட்டிலும் நீதியிலோ, ஒழுக்கத்திலோ, ஆச்சாரத்திலோ எந்தவித குறையும் காணப்படவில்லை.   

ஒருநாள் மன்னன் நளன் அவசரமாக கால் கழுவும்போது  காலில் நீர் பட்டும் படாமலும் அந்தி வழிபாட்டிற்கு வந்து அமர்ந்தான். அப்போது சனீஸ்வரன் நளனை பற்றிக்கொண்டார். அதனால் நளன் சூதாட்டத்தில் தமயந்தியை பிரிந்ததோடு நாட்டையும் இழந்தான். கார்க்கோடன் என்ற பாம்பின் வடிவெடுத்த சனீஸ்வரனின் மகன் மாந்தி நளனை தீண்டியதால் நளன் அகோர உருவிற்கு  மாறினான்.  இந்த நிலையில் நிடத நாட்டிற்கு வந்த மாமுனிவர் நாரதர், தனது ஞானதிருஷ்டியால் நளனைக் கண்டறிந்தார். இதற்கெல்லாம் காரணம் சனீஸ்வரன்தான் என்பதை அறிந்த நாரதர், நளனை திருநள்ளாறு சென்றுவர பணித்தார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்றும் கூறினார். நளன் திருநள்ளாறு வந்தான். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் இறங்கி நீராடினான். நீராடிய மறு நிமிடமே அவனை பீடித்திருந்த சனி பகவான் மின்னல்போல் அவனை விட்டுப்பிரிந்து அங்கிருந்த ஈஸ்வரன் கோவிலில் உள்ள கோபுரச் சுவரில் உள்ள திவ்ய மாடத்தில் அமர்ந்துகொண்டார். அன்றுமுதல் இன்று வரை திருநள்ளாறு வந்து பிரம்மதீர்த்தத்திலே நீராடி ஈஸ்வரனை வணங்குபவர்களுக்கு அருளாசி புரிந்துவருகிறார் சனி பகவான். நளனும் சிவபெருமானை வணங்கி என்னைப்போல் ஸ்ரீ சனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு அவரது அருள் கிட்டி துன்பங்கள் நீங்கி நன்மை அடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். அதனை இறைவனும்,  சனிபகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர். 

நளனுக்கு இங்கு விமோசனம் அளிக்கப்பட்டதால் இங்குள்ள பிரம்ம தீர்த்தம் நளதீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

முற்பிறப்பில் செய்த பாவங்களுக்கு தண்டனை வழங்கும் முகமாக சனீஸ்வர பகவான் மனிதர்களின் வாழ்வில் நீதிபதியாக செயல்படுகிறார். அவ்வாறு அவர் அளிக்கும் தண்டனை காலங்களை ஏழரைச் சனி, மங்குசனி, பொங்குசனி, தங்குசனி, மரணச் சனி என சாஸ்திர வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதன்படி ஏழரைச் சனியில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள். மங்கு சனியென்பது இளம் பருவத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் நிலையில் பகவான் சாட்டையடி போன்ற தண்டனையை தருவார். இது மிக இளம் வயதிலேயே வரும். வாலிப வயதில் இரண்டாவது சுற்றில் வருவது பொங்கு சனியாகும். இந்த காலத்தில் நீதி சாஸ்திரப்படி சிலருக்கு மங்காத செல்வத்தையும் மகிழ்ச்சியையும் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார். சிலருக்கு துன்ப துயரங்கள் ஏற்படலாம். மனிதர்கள் 60 வயதை நெருங்கும்போது மூன்றாம் சுற்றான தங்கு சனியை சந்திப்பார்கள். இக்காலத்தில் உற்றார் உறவினர்கள், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்வுடன் தங்கி மகிழ்ந்திருப்பார்கள். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்குசனியை தடையின்றி கடந்துவிடலாம். 90 க்கு மேல் வருவது மரணச்சனி. இந்த மரணச் சனியின்போது முற்பிறவியில் மனிதன் செய்த நன்மை தீமைகளின் படி அவர்களது மரணம் நிர்ணயிக்கப்பட்டு அது நிகழும்.   

சனியைப்போல கொடுப்பாரும் இல்லை. சனியைப்போல கெடுப்பாரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சனிபகவான் ஒவ்வொரு ராசியையும் சுற்றிவர இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அதன்படி சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகின்றன. இதன் காரணமாகவே 30 ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை. 30 ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று ஸ்லோகம் சொல்லப்படுகிறது. 

திருநள்ளாறு கோவிலில் ஸ்ரீசனிபகவான் 2-வது கோபுர வாசலின் வலதுபுறமாக கிழக்குநோக்கி இருக்கிறார். பொதுவாக சனி பகவான் மேற்கு நோக்கியே இருப்பார். உக்ரமூர்த்தியான சனிபகவான் இங்கு அனுக்ரக மூர்த்தியாக அருளாசி வழங்குகிறார். இக்கோவிலில் மற்ற 8 கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது சனி பகவானின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2014 ம் ஆண்டு முடிய சுமார் மூன்று ஆண்டு காலத்திற்கு சனி பகவான் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சனி பெயர்ச்சி தினத்தில் இருந்து 45 நாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சனி பகவானை தரிசனம் செய்யலாம்.  இது சனிப்பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்யும் பலன்களைத் தரும். ஆகவே இந்த சனிப்பெயர்ச்சி தினத்தன்று சனிபகவானை போற்றுவோம்! வாழ்வின் சங்கடங்களை போக்குவோம்!!  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்