முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு : சிக்கலாக்கினால் எதிர் விளைவுகள் ஏற்படும்-சீமான்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச - 26 ​- நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியார்​ எம்.ஜி. ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டம் மின்ட் தங்க சாலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:​  சமுக சீர்கேடுகளுக்கு எதிராக பற்றி எரியும் நெருப்பாக இருந்தவர் பெரியார். இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை புரிவதற்கு பெரியாரே காரணம். பெண் விடுதலைதான் இந்த மண்ணின் விடுதலை என்று கூறியவர்.  சொந்த மண்ணில் சமூக மாற்றத்துக்காக போராடியவர் பெரியார். கல்வி அறிவே எம் மக்களின் சுதந்திரம் என்றார் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட பெரியார் அதற்காகவே காங்கிரசை விட்டு வெளியேறினார்.  பச்சைத் தமிழன் காமராஜர் இந்த மண்ணை ஆள காங்கிரசை ஆதரித்தார்.   பெரியாரும், எம்.ஜி.ஆரும் ஒரே கொள்கையில் பயணித்தவர்கள். எம்.ஜி.ஆரை போல ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் தமிழனுக்கு தனி தேசம் கிடைத்திருக்கும். அது நடக்காமல் போனது வரலாற்று துயரம்.  இன்று தமிழர்கள் கடலுக்கு சென்று நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை உடைப்பேன் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேரத்துக்கு ஒன்று பேசுகிறார்கள். ப.சிதம்பரம் முதல் நாள் பேசியதை மறுநாள் வாபஸ் பெறுகிறார். முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இங்கு மலையாளிகள் இருக்க முடியாது.    தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கு காய்கறிகள் செல்கிறது. தொடர்ந்து சேட்டை செய்தால் கேரளக்காரர்கள் காய்கறிகளை பார்க்க முடியாது. கத்தரிக்காயைகூட பொருட்காட்சியில்தான் பார்க்க முடியும். முல்லைப்பெரியாறு விவகாரத்தை கேரளக்காரர்கள் சிக்கலாக்க நினைத்தால் எதிர் விளைவுகள் ஏற்படும்.  இவ்வாறு சீமான் பேசினார்.  கூட்டத்தில் டைரக்டர் மணிவண்ணன், தமிழ் முழக்கம் சாகுல், அமீது, பேராசிரியர் தீரன், வக்கீல் சந்திரசேகர், அன்பு தென்னரசன், வெற்றிக்குமரன், தங்கராசு, அமுதா நம்பி, இயக்குனர் ஐகோ, ஆவல் கணேசன், ஜோசப், ராஜ்குமார், விஜய் ஆண்டனி மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்