முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்கள்-பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் : அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      சிவகங்கை
Image Unavailable

                   சிவகங்கை  ஏப்.-சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பாக நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சு.மலர்விழி,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் அவர்கள் துவக்கி வைத்தார்.

               இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை பெறுவதற்கு இந்த முகாம் வழிவகை செய்கிறது. மேலும், தனியார் நிறுவனங்களில் அவரவர் தம் திறமைக்கேற்றவாறு வேலைவாய்ப்பினை தேர்வு செய்து பயன்பெறலாம். இந்த முகாம் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளிக்கிறது. ஆகவே, அதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை நீங்கள் பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.

              மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, பேசும்போது தெரிவித்ததாவது, இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதன் நோக்கம் என்னவென்றால் வேலை வேண்டுமென்று தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு  கொடுப்பவர்களையும் இணைக்கும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி என்று இதனைக் கூறலாம். தமிழக அரசு படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது. படிக்காத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக வருடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு குழுக்கள் அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அவரவர் திறமைக்கேற்ற சுயதொழில் மற்றும் குழுவாக சேர்ந்து தொழில் செய்வதற்கு மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகிறது.
    இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களைக் குடும்பத் தலைவராகக் கொண்ட பெண்களுக்கு அவர்கள் திறமையை அதிகரித்துக் கொள்ள பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறது. திறமையை அதிகரிக்க சுயஉதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இதுபோன்ற பயிற்சிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தெரிவித்தார்.

          வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 21 நிறுவனங்களில் 653 இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 285 பேர்கள்; தேர்வு செய்யப்பட்டு உடனடியாக அவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், எஸ்.ஐ.டி. சென்னை, டி.என்.ஐ.டி. சென்னை, ஸ்ரீபுரம் டெக்டைல்ஸ் திருப்பூர், எல்ஐசி காப்பீட்டு நிறுவனம் காரைக்குடி மற்றும் முன்னோடி நிறுவனங்கள் பங்கேற்றன.

         இம்முகாமில், திட்ட அலுவலர் மகளிர் திட்டம் இளங்கோ, புதுவாழ்வுத் திட்ட அலுவலர் முத்தமிழ்செல்வன், உதவி திட்ட அலுவலர்  மருதுபாண்டியன், மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்