உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-3

Source: provided

கஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றனர்.

கஜகஸ்தானியின் நூர்-சுல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ப்ரீஸ்டைலில் 53 கிலோ எடை பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், நடப்பு சாம்பியனான ஜப்பானின் மயூ முகைதாவை எதிர்த்து விளையாடினார். இதில் வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மயூ முகைதா இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான ரெப்பேஜ் சுற்றில் விளையாட வினேஷ் போகத் தகுதி பெற்றார். இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் உக்ரைனின் யூலியா கால்வாட்ஸியை எதிர்த்து விளையாட உள்ளார் வினேஷ் போகத். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் 2-வது சுற்றில் அமெரிக்காவின் சாரா ஹில்டெபிராண்டுடன் மோதுவார். இதிலும் வினேஷ் போகத் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ப்ரிவோலராகியை சந்திப்பார். வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றும் பட்சத்தில் வினேஷ் போகத், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்.

50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 2-9 என்ற கணக்கில் 3 முறை ஒலிம் பிக்கில் பதக்கம் வென்ற அஜர் பைஜானின் மரியா ஸ்டாட்னிக்கிடம் தோல்வியடைந்தார். மரியா ஸ்டாட்னிக் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் ரெப்பேஜ் சுற்றில் விளையாட சீமா பிஸ்லா தகுதி பெற்றார். இந்த சுற்றில் சீமா பிஸ்லா, நைஜீரியாவின் மெர்சி ஜெனிஸிஸுடன் மோதுகிறார்.

இதில் வெற்றி பெறும் பட்சத்தில் ரஷ்யாவின் கேத்ரினா போலேஷ்சுக்குடன் மோத வேண்டும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் சன்யானனுடன் பலப்பரீட்சை நடத்துவார் சீமா பிஸ்லா. வெண்கலப் பதக்கம் சீமா பிஸ்லா வசமாகும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார். 72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கோமல் 1-4 என்ற கணக்கில் துருக்கியின் பெஸ்டி அல்டக்கிடமும், 55 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் லலிதா 3-10 என்ற கணக்கில் மங்கோலியாவின் போலோர்டுயாவிடமும் தோல்வி யடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து