மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிப்பு - இனி கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள் என அரசாணை வெளியீடு

சென்னை : மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இனிமேல் கவுன்சிலர்களே அவர்களை தேர்வு செய்வார்கள்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். இந்த நடைமுறையானது கடந்த உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைக்கு வந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்
முன்னதாக நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைமுக தேர்தலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. பொதுவாக சட்டமன்ற கூட்டம் நடைபெறாத காலங்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றால் அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஒப்புதல் பெறப்படும். இந்த ஒப்புதல் பெறப்பட்ட நகலானது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசர சட்டமானது பிறப்பிக்கப்படும்.
அவசர சட்டம் பிறப்பிப்பு
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவி இடங்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்காமல், அங்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடிய வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இதுவரை 4 முறை நடைபெற்றிருக்கிறது. அதாவது 1996, 2001, 2006, மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி தேர்தல் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்திருந்தது. இந்த சூழ்நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். அதன் எதிரொலியாக தற்போது மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் தற்போது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி மேற்கண்ட தலைவர்களை மக்களுக்கு பதில் கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள்.