நான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      விளையாட்டு
SPORTS-3-2019 12 07

Source: provided

ஐதராபாத்: தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இன்டீசை இந்தியா 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இன்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது. ஹெட்மயர் 56 ரன்னும், இவின் லீவிஸ் 40 ரன்னும், கேப்டன் பொல்லார்ட் 37 ரன்னும் எடுத்தனர். பின்னர் அதன் இலக்கை விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட் ஆனார்.

அதன்பின் லோகேஷ் ராகுல்-கேப்டன் கோலி ஜோடி ரன்களை குவித்தது.லோகேஷ் ராகுல் 62 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பந்த் 18 ரன்னிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதிரடியாக விளையாடி விராட் கோலி இறுதி வரை களத்தில் நின்று வெற்றி பெற வைத்தார். இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 209 ரன் எடுத்து வென்றது. கோலி 50 பந்தில் 94 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.எனது இன்னிங்சில் முதல் பாதியை இளம் பேட்ஸ்மேன்கள் பின்பற்ற வேண்டாம். அந்த பகுதியில் நான் மோசமாக பேட்டிங் செய்தேன்.பந்தை அதிரடியாக ஆட முயற்சி செய்தேன்.

லோகேஷ்ராகுல் மீது அழுத்தத்தை செலுத்த விரும்பவில்லை. ஆனாலும் என்னால் ரன்களை விரைவாக எடுக்க முடியவில்லை. நல்லவேளையாக ஹோல்டரின் ஓவரில் ரன்களை எடுத்தேன். அதிலிருந்து நான் எங்கு தவறு செய்கிறேன் என்பதை ஆராய்ந்தேன் எனது பேட்டிங்கை நானே பார்த்து ஆராய்ந்தேன். அப்போதுதான் நான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்பதையும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் என்பதை உணர்ந்தேன். அதன்பின் பேட்டிங்கில் 3 முறை உணர்ந்து விளையாடும் பாணியை மாற்றினேன்.

காற்றில் பந்துகளை தூக்கி அடிப்பதை நான் ஊக்குவிப்பவன் இல்லை. என் ஆட்ட நுணுக்கத்தை 20 ஓவர் போட்டிகளில் மாற்றி அமைக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுபவன் அனைத்திலும் ரன்களை குவிக்க விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் மட்டும் சிறந்தவர் என்று ஆக விரும்பவில்லை. பெரிய ரன் இலக்கை விரட்டும் போது நிறைய கவனச்சிதறல்கள் ஏற்படும் சில பந்துகளை தவற விட்டு விட்டால் அழுத்தம் அதிகரிக்கிறது. அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது சவாலாகிறது. நீங்கள் அடிக்கும் ஷாட் மற்றும் வடிவமைப்புதான் உங்களை ஆட்டத்தில் நிலையான இடத்தில் வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து