பென்சன் பணம் வீடு தேடி வரும் திட்டம்: ஆந்திராவில் 1-ம் தேதி முதல் தொடக்கம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      இந்தியா
jaganmohan reddy 2020 01 29

விஜயவாடா : ஆந்திராவில் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பென்சன் பெறுபவர்களுக்கு வருகிற 1-ம் தேதி முதல் பென்சன் வீடு தேடி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைக்கவுள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். ஒரே நாளில் ஒன்றே கால் லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கியது, வீடு தேடி வரும் ரே‌ஷன் பொருட்கள் திட்டம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் தாய்மடி திட்டங்களை கொண்டு வந்தார். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை வழங்க வழி செய்யும் திஷா சட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றினார்.

இதன் தொடர்ச்சியாக சமூக பாதுகாப்பு திட்டங்களில் பென்சன் பெறுபவர்களுக்கு வருகிற 1-ம் தேதி முதல் பென்சன் வீடு தேடி வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளார். இதன் மூலம் மொத்தம் 54 லட்சத்து 64 ஆயிரம் பயனாளிகள் பயன் பெற உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதன்மை செயலாளர் நீலம் சஷ்னி, டி.ஜி.பி. கவுதம் சவால் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 6 மாதங்களுக்கு முன்பு வரை 39 லட்சம் பேருக்கு பென்சன் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதும் தகுதியான மேலும் பலரை பென்சன் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பேரில் பென்சன் பயனாளிகளின் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு புதிய பென்சன் கார்டுகள் மற்றும் அரிசி அட்டைகளை வழங்கவும் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வருகிற 15-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்குள் புதிய கார்டுகளை வினியோகிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறி வுறுத்தி உள்ளார். இதே போல ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தையும் வருகிற 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளார். இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் விவரங்களை கிராம அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், இத்திட்டத்தில் தகுதியான யாரையும் விடுவித்து விடக் கூடாது எனவும் அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து