முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டதாக வெளியான செய்தியை இங்கிலாந்து அரசு மறுத்துள்ளது.

வங்கி மோசடி செய்து விட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, நேற்று முன்தினம் இரவு மும்பை கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் பரவின. அங்குள்ள ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இதனை மல்லையாவின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மல்லையாவை நாடு கடத்துதல் தொடர்பான கோப்புகளில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் ப்ரீத்தி படேல் இன்னும் கையொப்பம் இடவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் டியாஜியோ மது நிறுவனத்திடம் 303 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால், விஜய் மல்லையா இப்போதைக்கு நாடுகடத்தப்பட மாட்டார் என்று தெரிகிறது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் ஏய்ப்பு செய்து விட்டு லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா 2016-ம் ஆண்டு முதல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். முன்னதாக, லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சி.பி.ஐ. தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில் அவர் அடைக்கப்படும் சிறை மற்றும் சிறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், சிறையில் அவருக்காக பலத்த பாதுகாப்புடன் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்று சி.பி.ஐ. தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய வீடியோ பதிவு ஒன்றையும் லண்டன் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து விஜய் மல்லையாவை சி.பி.ஐ. அதிகாரிகள் விமானத்தில் அழைத்து வந்தனர் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து