மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத இடஒதுக்கீடு: தமிழக அரசின் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்: நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி நன்றி

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
CM 2020 10 30-1

Source: provided

சென்னை : தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.  ஒப்புதல் அளித்த கவர்னரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். மேலும்  பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த மசோதா விஷயத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக அரசு பள்ளியில் படித்து 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது. 

இதையடுத்து, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

40 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இது சம்பந்தமான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணையில் உள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் 5 பேர் குழுவாக சென்று கவர்னரை சந்தித்து மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, 3 அல்லது 4 வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019-2020 ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் அனுமதி தர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது. 

இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ,  மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு பின் கவர்னர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.  கவர்னரின் ஒப்புதல் செய்தி கிடைத்ததும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முதல்வருக்கு தங்களது நன்றியையும் பாராட்டையும் அவர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால்,  கவுன்சிலிங் விரைவில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே  தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, கவர்னரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.  கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம்  உள் இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிலையில் கவர்னர் ஒப்புதல் அளித்தது குறித்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், 

கவர்னர் ஒப்புதல் அளித்த செய்தி மகிழ்ச்சியான செய்தி. கண்டிப்பாக இந்த ஆண்டே இந்த உள்ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும். நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேரும் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் எந்த முதலமைச்சரும் எடுக்காத முடிவை நமது முதல்வர் எடுத்தார். ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர்  இந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.

மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், 

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. முதல்வர்  பசும்பொன் கிராமத்தில் பேட்டி அளித்த போது, நான் அரசு பள்ளியில் படித்தவன். எனவே எனக்கு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உணர்வு மிக நன்றாக தெரியும் என்று கூறியிருந்தார். இந்த உள்ஒதுக்கீடு வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. முதல்வரின் சீரிய சிந்தனையில் உதித்த கருத்து இது. சரியான நேரத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை வரவேற்று நன்றி தெரிவிக்கிறோம் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

கடந்து வந்த பாதை

மார்ச் 21: நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். 

ஏப்ரல் 14: உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.

ஜூன் 8: நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அளித்தார். 

ஜூன் 15: ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். 

அக்டோபர் 5: உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கவர்னருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்தித்தனர்.

அக்டோபர் 20: உள் ஒதுக்கீடு கோரி கவர்னருடன் அமைச்சா்கள் அடங்கிய குழு சந்தித்தது.

அக்டோபர் 29: சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. 

அக்டோபர் 30: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து