முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 30-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மார்ச் 25-ம் தேதி தொடங்கி ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கடந்த 248 நாட்கள் அதாவது சுமார் 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.  

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படவில்லை. கடைகள் படிப்படியாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ரயில், பேருந்து, ஆட்டோ, கார் ஓட அனுமதிக்கப்பட்டது. கோயில்களை திறந்து வழிபாடுகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டது. தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதுவரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லுரிகள் திறப்பு, மெரினா கடற்கரை, நீச்சல்குளம், டாஸ்மாக் பார் உள்ளிட்ட சிலவற்றுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.. அவற்றுக்கும் இனி தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. நவம்பர் மாத ஊரடங்கு வருகிற 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது குறித்து இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.  ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். தற்போது தமிழகத்தில் 30-ம் தேதி வரை ஊரடங்கு இருந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று  தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார். 

இந்த ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கொரோனா 2-வது அலை வீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது போன்ற அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.  இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் சில முக்கிய தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வருகிற ஜனவரி மாதம் முதல் திறக்கலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வருகிற 29 அல்லது 30-ம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து