பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      இந்தியா
Megaboopa 2020-11-28

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலைப்போல், கடந்த காலங்களிலும் அதிக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு அல்ல.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் தீர்வு ஏற்படும். நமது நிலத்தை ஆக்கிரமித்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் நடத்த முடியாது? அது, முஸ்லிம் நாடு என்பதுதான் காரணமா? பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி தீர்வு காணும் வரை காஷ்மீர் பிரச்சினை இருந்து கொண்டேதான் இருக்கும்.

370-வது பிரிவை நீக்கினால் எல்லா பிரச்சினையும் போய்விடும் என்றால், காஷ்மீரில் இன்னும் ராணுவத்தை நிறுத்தி இருப்பது ஏன்?

இங்கு 9 லட்சம் ராணுவத்தினர் இருக்கின்றனர். வேறு எந்த மாநிலத்திலாவது, குடியிருப்பு பகுதிகளில் இவ்வளவு ராணுவத்தினர் இருக்கிறார்களா? அவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டியதுதானே?

இந்த தேர்தலில் மத்திய அரசு ஜனநாயக படுகொலை செய்தது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் வீட்டுக்குள் அடைக்கப்பட்டு கிடந்தனர். ஆனால், பா.ஜனதா வேட்பாளர்கள் சுதந்திரமாக பிரசாரம் செய்தனர்.

நான் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. அப்படியானால் கட்டுக்கதை உண்மைபோல் காட்டப்படுகிறது. உண்மைநிலை காட்டப்படவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து