தமிழகத்தில் உள்ளட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      இந்தியா
Supreme Court 2020 12 01

Source: provided

புதுடெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களுக்கு, கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் விட்டு விட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டு உள்ளது.  

இந்த நிலையில் சங்கர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்த வேண்டும். இதில் புதியதாக உருவக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்கானிக்கும் என கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கி நீட்டிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமனியன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன், 

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரை கிட்டதட்ட முடிந்த நிலையில் உள்ளது. இதில் கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தும் சூழலும் தற்போது இல்லை. இதை தவிர வாக்கு இயந்திரங்களும் போதுமானதாக உடனடியாக வழங்க முடியாது என்பதால் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் என தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து