பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை: பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      இந்தியா
Modi 2020 12 14

Source: provided

புதுச்சேரி : பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகிறார். பல்வேறு அரசு பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி சட்ட சபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அம்மாநில அரசு கவிழ்ந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக விமானத்தில் சென்னை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.20 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாரதீய ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. வினர் கலந்து கொள்கின்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் கோரிமேடு ஜிப்மர் ஆடிட்டோரியம் செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக காரைக்காலை உள்ளடக்கிய சதானந்தபுரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த சாலையானது ரூ.2 ஆயிரத்து 426 கோடி மதிப்பில் உருவாகிறது.

காரைக்கால் ஜிப்மர் கிளை மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த கல்லூரியானது ரூ.491 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்கப்படும். சாகர்மாலா திட்டத்தின்கீழ் ரூ.44 கோடி செலவில் புதுவை துறைமுக மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த பணிகள் முடிந்ததும் புதுவை துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கும்.

அதை தொடர்ந்து இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ. 7 கோடி செலவில் செயற்கை இழையினால் ஆன 400 மீட்டர் ஓடுதளம் அமைப்பதற்கும், ரூ.28 கோடி செலவில் ஜிப்மரில் ரத்த மையம், ஆய்வு மையம், பயிற்சி மையம் ஆகியவை அமைப்பதற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி, ரூ.14.83 கோடியில் கட்டப்பட்டுள்ள புதுவை நகராட்சி கட்டிடம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அதன்பின் கோரிமேடு ஜிப்மரில் இருந்து கார் மூலம் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் நேராக விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுவை போலீசார் தீவிரமாக கவனித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக ஆவடியில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுவை வந்துள்ளனர். அவர்கள் கோரிமேடு போலீஸ் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து