முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
stalin 2024-12-30

தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது என்றும், பீகாரில் கூறியதை பிரதமர் மோடி இங்கு பேசுவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் நேற்று (நவம்.3ம் தேதி) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் கூறியதாவது: “அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய கையோடு இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தீய மற்றும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. அதைத் தடுப்பதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு உரிய அவகாசம் தேவை, பதற்றத்துடன் இந்தப் பணியை செய்ய வேண்டியது இல்லை என்றும் வலியுறுத்தி உள்ளோம். உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திர செயலாகவே இதை பார்க்கிறோம். பீகாரிலும் இதுவே நடந்தது. இளம் தலைவர் ராகுல் இதை கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் வரவில்லை.

ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சந்தேகமும் இருக்கிறது. இது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். பா.ஜ.க. இது போன்ற எந்த சதிச் செயலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. தன்னை எல்லோருக்குமான பிரதமர் என்று பீகாரில் கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி வாக்கு அரசியலுக்காக அங்கு நாடகம் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் வந்து இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு தைரியம் உள்ளதா? பா.ஜ.க.வினர் என்ன சதி செய்தாலும், அவதூறு பரப்பினாலும், போலியான தகவல்களைப் பரப்பினாலும் 2026 தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும். தமிழக மக்கள் மீதான நம்பிக்கையில் இதைக் கூறுகிறேன். துணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

2021-ல் கொத்தடிமை அ.தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தை மீட்டோம். 2026-ல் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை மீட்போம். தமிழக தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயரிட்டு அழைத்து மகிழுங்கள்” என்று முதல்வர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சிவசங்கர், ராஜேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், தருமபுரி எம்.பி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தருமபுரியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளையும், தடங்கம் பகுதியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் காரில் சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து