முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு நேற்றைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இடைக்கால மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வைத்தியநாதன், தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனம் மீது உள்ளூர் மக்களிடம் ஒட்டுமொத்தமாக நம்பிக்கையின்மை உள்ளது. அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதை மாவட்ட நிர்வாகம் கையாள்வது மிகவும் கடினமான ஒன்று என்று தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, கொரோனாவால் மக்கள் உயிரிழந்து வரும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவி வருவதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக அரசு கூறக்கூடாது. இது வேதாந்தா மட்டுமல்ல எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. மாநில அரசு இதுபோன்ற வாதங்களை முன்வைக்கக்கூடாது என்று கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடாது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.  ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விரிவான பிரமான பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ( ஏப். 26) ஒத்திவைத்தது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஆலையை திறக்க பொதுமக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து