முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வியடைந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வியடைந்த கெஜ்ரிவால் தற்போது வீடு வீடாக ரேசன் பொருட்களை வழங்குவது பற்றி பேசுகிறார் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின்போது டெல்லி மக்களுக்கு வீடுவீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்ப்படும் என்று ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி அளித்தது. 

தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றான ரேசன் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கும் திட்டத்தை அமல்படுத்த ஆம் ஆத்மி முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், டெல்லியில் வீடு வீடாக ரேசன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.  

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வியடைந்த கெஜ்ரிவால் தற்போது வீடு வீடாக ரேசன் பொருட்களை வழங்குவது பற்றி பேசுகிறார்.  ரேசன் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் டெல்லி அரசு உள்ளது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. 

டெல்லி, மேற்குவங்காளம் மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை இன்னும் ஏற்கவில்லை. டெல்லியில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து