முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகளின் கடும் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு அடுத்த கூட்டம் நாளை நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.  ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் நேற்று 2 வது நாளாக கூடியது.  அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. 

பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்  கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நேற்று முன்தினம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று காலை முதலே எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை முதலில் பிற்பகல் 2 மணி வரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். அதே போல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தனர்.  

மக்களவை மீண்டும் கூடியவுடன் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.  

மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் 15 நோட்டீஸ்களை அளித்திருந்தனர். விவாதம் நடத்த வேண்டும் என கோரி மைய பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். ஆனால் பூஜ்ய நேரத்தில் விவாதங்களை எழுப்பலாம் என அவை தலைவர் கூறினார்.  எனினும் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி வேண்டும் எனக்கூறி தி.மு.க. எம்.பி.க்களும் முழக்கமிட்டனர். இதன்பின் 2 மணிக்கு மாநிலங்களவை தொடங்கிய பின் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு மந்தமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.  மீண்டும் அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு நாளை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டம் நாளை 22-ம் தேதி நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து