பயிர்க் காப்பீட்டுத் திட்ட காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை மாற்றியமைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Stalin-modi-2021 07 29

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒரு முறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலைநோக்குப் பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு - செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினைத் தமிழகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்றும், தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரிப் பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016-2017-ல் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-2021-ல் 1,918 கோடி ரூபாயாக, அதாவது 239 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உள்ள இந்தக் காலகட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து வரும் நிலையில், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்குச் சவாலாகவும், கடினமாகவும் உள்ளது என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டுமென்று முதல்வர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து