முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூலில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்பு

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

இந்திய விமானப்படையின் சி -130 ஜே விமானம் மூலம் நேற்று 85-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள்.   கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்து வருகிறார்கள். வணிக ரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. தாயகம் திரும்புவது மற்றும் இதர உதவிகளுக்காக அந்த சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் கூடுதலாக தொலைபேசி எண்களையும், வாட்ஸ்அப் எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, காபூல் நகரில் உள்ள காலிஜா என்ற திருமண மண்டபத்தில் சுமார் 200 இந்தியர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மண்டபம், விமான நிலையத்தில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது. அங்கு பாதுகாப்பு படையினர் யாரும் பாதுகாப்புக்கு இல்லை. தற்போது இந்திய விமானப்படையின் சி -130 ஜே  விமானம் 85-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் காபூலில் இருந்து புறப்பட்டது. விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தஜிகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. 85 பேரும் நேற்று நண்பகல் இந்தியா வந்தடைந்தனர். காபூலில் உள்ள இந்திய மக்களை வெளியேற்ற இந்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மேலும் 250 பேரை மீட்டு வருவதற்கு இந்திய விமானப் படையின் சி 17 விமானம் காபூலுக்கு பறக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து