முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வாங்க அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் தொகை செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குருசந்திர விஷ்வாஸ், ஆசிஷ் குமார். இவர்கள் தங்களது பெற்றோர்கள் வங்கிக்கு சென்று தங்களது வங்கி கணக்கில் பள்ளி சீருடைக்காக அரசு உதவித்தொகை செலுத்தி இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றனர்.

அவர்கள் உத்திரபீகார் கிராம வங்கிக்கு சென்று தங்களது கணக்கில் உள்ள தொகையை பற்றி கேட்டனர். அப்போது குருசந்திர விஷ்வாஸ் வங்கி கணக்கில் ரூ. 60 கோடியும், ஆசிஷ்குமார் வங்கி கணக்கில் ரூ. 900 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதித்து வங்கி மேலாளர் நடவடிக்கை எடுத்தார். மாணவர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

 

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து